
சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயிலை திருச்சுழி, நரிக்குடியில் நிற்க வலியுறுத்தியும், தினமும் இயக்க கோரியும் தமிழக வாழ்வுரிமை கட்சியினர் விருதுநகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
சென்னை தாம்பரம் முதல் திருச்சி மானாமதுரை அருப்புக்கோட்டை, விருதுநகர் வழியாக செங்கோட்டை வரை இயக்கப்படும் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் புதன்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை என வாரம் மும்முறை இயக்கப்பட்டுவருகிறது.
இந்த ரயில் கொரோனா காலகட்டத்திற்கு முன்பு விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் 8 இடங்களில் நின்று சென்றது. இதனால், பொதுமக்களும், வியாபாரிகளும் பயனடைந்தனர். ஆனால், கொரோனா பரவலின்போது சிலம்பு விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் இயக்கப்பட்டபோது, நரிக்குடி, திருச்சுழி நிறுத்தங்களில் நிற்பதில்லை. எனவே, இந்த ரயிலை திருச்சுழி, நரிக்குடியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும், வாராந்திர ரயிலாக இருக்கும் இந்த ரயிலை வாரத்தின் ஏழு நாட்களும் இயக்க நடவடிக்கை எடுத்தால், விருதுநகர், அருப்புக்கோட்டை, சிவகாசி நகரில் உள்ள வியாபாரிகள், பொதுமக்கள் பெரிதும் பயனடைவார்கள் என விருதுநகர் மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியினர் தெரிவித்துள்ளனர்.