
பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 16-21ம் தேதி வரை நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி நவம்பர் 16-21ம் தேதி வரை நைஜீரியா, பிரேசில், கயானா ஆகிய மூன்று நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். நவம்பர் 16-17ம் தேதிகளில் நைஜீரியா செல்லும் அவர், பிரேசிலில் நடக்கும் ஜி-20 மாநாட்டில் 18-19ம் தேதிகளில் பங்கேற்றுவிட்டு கயனாவிற்கு 19-21ம் தேதிகளில் செல்கிறார்.
இந்தப்பயணம் குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:நைஜீரியா அதிபரின் அழைப்பை ஏற்று, நைஜீரியாவுக்கு நான் மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும். ஜனநாயகம் மற்றும் பன்முகத்தன்மை அடிப்படையில் நமது நல்லுறவை உருவாக்க எனது பயணம் ஒரு வாய்ப்பாக அமையும். இந்தியில் எனக்கு அன்பான வரவேற்புச் செய்திகளை அனுப்பியுள்ள இந்திய சமூகத்தினரையும், நைஜீரியாவைச் சேர்ந்த நண்பர்களையும் சந்திப்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.
பிரேசிலில், 19-வது ஜி-20 உச்சிமாநாட்டில் முக்கூட்டு உறுப்பினராக நான் கலந்து கொள்கிறேன். கடந்த ஆண்டு, இந்தியாவின் வெற்றிகரமான தலைமையில் ஜி-20- மாநாடு, மக்களின் ஜி-20 மாநாடாக உயர்த்தியது. உலகளாவிய தெற்கின் முன்னுரிமைகளை அதன் நிகழ்ச்சி நிரலில் சேர்த்தோம், இந்த ஆண்டு, பிரேசில் இந்தியாவின் வழியைப் பின்பற்றியுள்ளது. “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற நமது தொலைநோக்கு பார்வைக்கு ஏற்ப அர்த்தமுள்ள விவாதங்களை நான் எதிர்நோக்கியுள்ளேன். பல்வேறு தலைவர்களுடன் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும் இந்த வாய்ப்பை நான் பயன்படுத்திக் கொள்வேன்.
அதிபர் முகமது இர்பான் அலியின் அழைப்பின் பேரில் கயானாவுக்கு நான் மேற்கொள்ளும் பயணம், கடந்த 50 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் பயணமாக இருக்கும். பாரம்பரியம், கலாச்சாரம் மற்றும் மதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த நமது தனித்துவமான உறவுக்கு உத்திசார் திசையை அளிப்பது குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வோம். 185 ஆண்டுகளுக்கு முன்பு புலம்பெயர்ந்த இந்திய வம்சாவளிச் சந்ததியினரைச் சந்திக்க இருக்கிறேன்.
இந்தப் பயணத்தின்போது, 2-வது இந்தியா- கரீபியன் சமுதாய உச்சிமாநாட்டில் பங்கேற்கும் கரீபியன் நட்பு நாடுகளின் தலைவர்களுடன் நானும் பங்கேற்க உள்ளேன். நாங்கள் நெருங்கிய உறவுகளால் ஒன்றாக வலுவுடன் நிற்கிறோம். வரலாற்று உறவுகளை புதுப்பிக்கவும், நமது ஒத்துழைப்பை புதிய களங்களுக்கு விரிவுபடுத்தவும் இந்த உச்சிமாநாடு நமக்கு உதவும் எனக்கூறியுள்ளார்