
Israel attacks lebanon beirut amid ceasefire US draft talk
லெபனான் மீது இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல்- US-ன் போர் நிறுத்த வரைவு என்ன ஆனது?
லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதிகளில் இஸ்ரேல் அரசாங்கம் தொடர்ச்சியாக நான்காவது நாளாக தீவரமான வான்வழித்தாக்குதலை நடத்திவருகிறது. அமெரிக்க அரசாங்கம் சமர்ப்பித்த போர்நிறுத்த அறிக்கையை லெபனான் பரிசீலனை செய்துவந்த நிலையில், இந்த தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாக்குதல் குறித்து தெரிவிக்கும் இஸ்ரேல், தாங்கம் பொதுமக்களின் குடியிருப்புகளை குறிவைக்கவில்லை எனவும், ஹிஸ்புல்லாவின் அலுவலகம் மற்றும் நிலைகளை குறிவைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலுக்கு முன் அப்பகுதியில் உள்ள மக்கள் வெளியேறுமாறு இஸ்ரேல் இரண்டு முறை அறிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. வெளியேறுவதற்கு போதுமான நேரம் இருந்ததால் மக்கள் பாதுகாப்பாக வெளியேறியுள்ளனர். எந்தவித உயிர்சேதமும் இல்லை எனத் தெரியவருகிறது.
பதில் தாக்குதலாக ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் நிலைகள் மீது ராக்கெட்டை ஏவியது.
இந்த பதற்றமான சூழலுக்கு இடையில்தான் அமெரிக்க போர் நிறுத்ததிற்கான வரைவை ஐநா தூதுவர் மூலம் லெபனானிடம் சமர்பித்திருந்தது.
இந்த வரைவின் மீது லெபனான் இரண்டொரு நாட்களில் முடிவு எடுக்கவுள்ளதாக அமெரிக்காவின் CNN தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. இந்த போர் நிறுத்த வரைவின் மீதான பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஆதரவை தெரிவித்திருப்பதாகவும் அந்த செய்தி மேற்கொள்காட்டுகிறது.
இஸ்ரேல், லெபனான் இடையேயான மோதலால் இதுவரை மில்லியன் கணக்கான லெபனியர்கள் தங்கள் சொந்த வீட்டை, ஊரை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர். 2023ம் ஆண்டு அக்டோபர் முதல் நடந்துவரும் தாக்குதலில், லெபனானில் 3,386 பேர் உயிரிழந்துள்ளனர், 14,417 பேர் காயம்பட்டுள்ளனர்.