
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால், சமீப காலமாக திரைப்பட வாய்ப்புகளை குறைத்துக்கொண்டு விளம்பரங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இவர் தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இந்தியன் 3’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், விஷ்ணு மஞ்சு நடிக்கும் ‘கண்ணப்பா’ என்ற தெலுங்கு திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திருமணத்திற்குப் பிறகு காஜல் அகர்வால் படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்த நிலையில், அவர் தற்போது தேர்ந்தெடுத்த படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்.

இதனிடையே, காஜல் அகர்வால் அழகுசாதனப் பொருட்கள் தயாரிப்பு மற்றும் நகைகள் தயாரிப்பு போன்ற தொழில்களிலும் தனது நண்பர்களுடன் இணைந்து ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், தற்போது அவர் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் விளம்பரங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஆடை விளம்பரம் ஒன்றில் தனது மகனுடன் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.
திரைப்பட வாய்ப்புகள் குறைந்து துவண்டு போயிருக்கும் சில மூத்த நடிகைகள், காஜல் அகர்வாலின் இந்த பாணியை பின்பற்றி வருமானம் ஈட்டலாமா என்று யோசித்து வருவதாக திரை வட்டாரங்களில் பேசப்படுகிறது.