
பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம்
இலங்கை கடற்படையால் மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர் பாம்பன் பாலத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை நடத்தியுள்ளனர். இப்போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போராட்டம் குறித்துப் பேசிய மீனவர் சங்கப்பிரதிநிதிகள், மீனவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுவதை தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு மெத்தனப்போக்குடன் நடந்துவருவதாகவும், கடந்த ஆட்சியாளர்களை விட தற்போதுள்ள மத்திய அரசு ஆட்சியாளர்கள் தமிழக மீனவர்களிடையே விரதப்போக்கை கடைபிடித்துவருவதாகவும் தெரிவிக்கின்றனர். இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பிரதமர் மோடி பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்துவைக்கும் போது முற்றுகைப்போராட்டத்தில் ஈடுபடுவோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பாரம்பரிய மீன்பிடி உரிமைய நிலைநாட்டும் வகையில் கச்சத்தீவை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்திப் பேசியுள்ளனர்.
நவம்பர் 10ம் தேதி 23 மீனவர்களும், இன்று (நவம்பர் 12) நாகப்பட்டினம் மீனவர்கள் 12 பேரையும் இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. கடந்த சில நாட்களில் 35 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
2024ம் ஆண்டில் மட்டும் 485க்கும் அதிகமான மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 65க்கும் அதிகமான படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்படும் மீனவர்கள் சில மாதங்களில் விடுதலை செய்யப்பட்டாலும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு திருப்பித்தருவதில்லை. இதனால், மீனவர்களின் வாழ்வாதரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இலங்கை கடற்படை கைது நடவடிக்கையை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் உள்ளிட்டோர் அறிக்கை வெளியிட்டிருந்ததும், கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக தமிழக மீனவர்களை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க விடமாட்டோம் என பேசியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.