
சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் படந்தால் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், வைப்பாறு நீர் நிலை பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவரும் சமூக ஆர்வலருமான திரு. அய்யப்பன் அவர்கள் கலந்து கொண்டு இயக்கத்தின் சார்பில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அந்த மனுவில் அவர் பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளார்:
- நீதிமன்ற உத்தரவின்படி, சாத்தூர் படந்தால் வைப்பாற்றில் புதற்காடு போல் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
- வைப்பாற்றின் பல குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக ஆற்றில் கலப்பதைத் தடுத்து, மாற்று வழியில் கழிவுநீரை கொண்டு செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் வைப்பாற்றில் கழிவு நீர் கலப்பது தடுக்கப்பட வேண்டும்.
- வைப்பாற்றில் தேவையற்ற குப்பைகள் கொட்டப்படுவதை முழுமையாக நிறுத்த வேண்டும். மேலும், ஏற்கனவே கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றி ஆற்றுப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.
- அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் வைப்பாறு கரை சாலை வழியாகச் செல்லும்போது, ஆற்றில் கொட்டப்பட்டுள்ள குப்பை மற்றும் குளம் போல் தேங்கியிருக்கும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது.
ஆகவே, இயற்கை வளமும் உயிர் ஜீவனுமான வைப்பாறு நீர் நிலையினை பேணி காத்து காப்பாற்ற வேண்டும் என்று திரு. அய்யப்பன் அவர்கள் சாத்தூர் ஊராட்சி ஒன்றியம் தனி அலுவலரிடம் தனது கோரிக்கை மனுவை வழங்கினார்.