
யூடியூபர்களுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என சினிமா தயாரிப்பாளர்களிடம் தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் மல்டிபிளக்ஸ் சங்கத் தலைவராக உள்ள திருப்பூர் சுப்பிரமணியம் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த கோரிக்கை குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அண்மைக்காலமாக யூடியூபர்கள் படத்திற்கு நெகடிவ் ரிவ்யூ கூறி படத்தை காலி செய்யும் போக்கு அதிகரித்திருப்பதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் முதல் காட்சி காலை 9 மணிக்குப் போடப்பட்டாலும், அண்டைமாநிலங்களில் அதிகாலையிலே படம் வெளியிடப்படுகிறது.
இருப்பினும், தமிழ்நாடு எல்லையில் உள்ள நகரங்களில், இந்த யூடியூபர்கள் படத்தைப்பார்த்துவிட்டு விமர்சனம் என்கிற பெயரில் படத்தை காலி செய்கிறார்கள் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், திரையரங்க உரிமையாளர்கள் தியேட்டருக்குள் பொதுமக்களின் கருத்துகளை யூடியூபர்கள் கேட்க அனுமதிக்கக்கூடாது என்ற கோரிக்கை வைத்துள்ள அவர், சொந்த காசில் தங்களுக்குத் தாங்களே யூடியூபர்கள் மூலம் சூனியம் வைத்துக்கொள்ளக்கூடாது எனவும் கூறியுள்ளார்.
சமீபகாலமாக இதுபோன்ற விமர்சனங்கள் வரையறை இல்லாமல் சென்றுகொண்டிருப்பதாகவும், அண்மையில் வெளியான இந்தியன் 2, வேட்டையன், கங்குவா ஆகிய படங்கள் இந்த விமர்சனங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடுகிறார்.