
ஈரான் நாட்டின் அதி உயர் தலைவரான அலி காமெனியின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக தகவல்கள் உலாவரத்தொடங்கியுள்ளன.
செப்டம்பர் மாதம் 26ம் தேதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில் நடந்த ரகசிய கூட்டத்தில் அலி காமெனியின் உடல்நிலைக் குறித்து பேசப்பட்டதாகவும், அலி காமெனியின் அதிகாரம் அனைத்தையும் அவர் உயிருடன் இருக்கும்போதே அவருடைய மகன் முஸ்தபா காமெனிக்கு ஒப்படைப்பது குறித்து பேசப்பட்டதாக ஈரான் இன்டர்நேஷனல் செய்தி வெளியிட்டுள்ளது.

அலி காமெனி உடல்நிலை குறித்த தகவல் கசியக்கூடாது என அந்தக்கூட்டத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்பதையும், மக்கள் மத்தியில் இந்த செய்தி பரவி போராட்டத்திற்கு வழிவகுத்துவிடக்கூடாது என்பதிலும் ஈரான் அரசு கவனத்தை செலுத்தியதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
சிக்கல் இல்லாமல் முஸ்தபா காமெனியை ஈரானின் அதி உயர் தலைவராக மாற்றுவதற்கான வேலைகள் வேகமெடுத்துள்ளதாகம் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் அலி காமெனி கோமா நிலைக்கு சென்றதாக தகவல் பரவுகிறது.