
elon musk X revelry bluesky Getting more users after US election reults
அமெரிக்கத் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்ற பின்பு பல லட்சக்கணக்கான பயனர்கள் எலான் மஸ்க்கின் X தளத்தை விட்டுவிட்டு ப்ளூஸ்கை என்ற தளத்தைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். X தளத்தில் தீவிர வலதுசாரி கருத்துகள், வெறுப்பு பேச்சுக்கள் உள்ளதாக பயனர்கள் பலர் கருதுகின்றனர். டிரம்ப்புக்கு ஆதரவாக எலான் மஸ்க் தனது X தளத்தில் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். அந்தத் தளமானது டிரம்பின் பிரச்சார கருவியாகவே தேர்தலில் பயன்பட்டதாகவே சில அமெரிக்கர்களால் பார்க்கப்பட்டது. அதனால், X -க்கு போட்டியான ப்ளூஸ்கை தளத்தை அதிகம் பேர் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அமெரிக்கத் தேர்தலுக்கு முன்புவரை ப்ளூஸ்கை பயனர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வந்த நிலையில், தேர்தல் முடிவுகளுக்குப் பின்பு அது ராக்கெட் வேகத்தில் செல்கிறது. தற்போது அந்த தளத்திற்கு 17 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் இருக்கின்றனர். தினமும் 1 மில்லியனுக்கும் அதிகமானோர் அதில் இணைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஊடகத்தளங்கள் பல இருக்க ஏன் ப்ளூஸ்கை இவ்வளவு ஆதரவைப் பெறுகிறது என்பதற்கு சுவாரஸ்யமான பின்னணி இருக்கிறது.
எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது, ட்விட்டருக்கு CEO-ஆக இருந்த ஜேக் டொர்சிதான், தற்போது கவனத்தைப் பெற்றுவரும் ப்ளூஸ்கை தளத்தை உருவாக்கியவர். அவர் கடந்த மே மாதம் நிறுவனத்தின் நிர்வாக குழுவில் இருந்து விலகிவிட்டார்.
ப்ளூஸ்கை ஏன் விரும்பப்படுகிறது?
ப்ளூஸ்கை தளம் பேஸ்புக், X, இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகத்தளம்தான், அதில், பதிவுகளை இடலாம், பகிரலாம். இதில் என்ன புதுமை இருக்கிறது என நீங்கள் யோசிப்பது புரிகிறது. மேலே சொன்ன ஊடகங்களில் கணக்குத் தொடங்கினால், உங்கள் தரவுகள் அனைத்தும் அந்நிறுவனம் வைத்துள்ள சர்வர்களில்தான் பதிவாகும், ஆனால், ப்ளூஸ்கை தளத்தில் நீங்கள் கணக்குத் தொடங்கினால், அந்நிறுவனத்தின் கன்ட்ரோல் இல்லாத வேறு இடத்தில் உங்கள் தரவுகளை சேமித்துவைக்கலாம். அதுபோல் நாம் பதிவிடும் பகிரும் தகவல்களின் அடிப்படையில் சில பரிந்துரை கன்டென்ட்களை பேஸ்புக், X, இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகம் வழங்கும், ஆனால், ப்ளூஸ்கை அவ்வாறு வழங்காது.
மஸ்கின் X-ஐ பீட் செய்யுமா?
17 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் ப்ளூஸ்கை தளத்தை பயன்படுத்திவரும் நிலையில், X-ஐ தளத்தை பீட் செய்யுமா என்பதை தற்போது கூறமுடியாது. அதற்கு சில காலங்கள் எடுக்கலாம். ப்ளூஸ்கையை பயன்படுத்துபவர்கள் தளம் குறித்து பேசுகையில், 10 வருடங்களுக்கு முன்பு ட்விட்டர் பயன்படுத்தியது போன்று இருப்பதாக கூறுகின்றனர்.