
அமரன் நெல்லை தியேட்டரில் பெட்ரோக் குண்டு வீச்சு
நெல்லையில் அமரன் திரைப்படம் ஓடும் அலங்கார் திரையரங்கில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வெளியான அமரன் திரைப்படம் திரையரங்களில் வசூலை வாரிக்குவித்துவருகிறது. சுமார் 200 கோடிக்கும் மேலாக இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்ட இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தாலும், படத்தின் சில காட்சிகள் காஷ்மீர் மக்களைத் தவறாக சித்தரிப்பதாகவும், அவர்களின் தரப்பு நியாயத்தை சரியான முறையில் காட்டவில்லை என சில தரப்பினரால் கூறப்பட்டது.
சில அமைப்பினர் இப்படத்திற்கு எதிராக ஆங்காங்கே சில போராட்டத்தையும் முன்னெடுத்திருந்தனர். இந்தச்சூழ்நிலையில், திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் பகுதியில் அமரன் படம் ஓடும் அலங்கார் திரையரங்கில் இன்று(நவம்பர் 16) அதிகாலையில், அடையாளம் தெரியாத இரு நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டுவீச்சு குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன