
sri lanka election results landslide victory for NPP
இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகவின் தேசிய மக்கள் சக்தி கட்சி அந்நாட்டு நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. 225 இடங்களில் 159 இடங்களோடு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை அக்கட்சி வென்றுள்ளது.
40 இடங்களைப் பிடித்து சஜித் பிரேமதாசா நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பேற்கவுள்ளார்.ராஜபக்ச நாட்டைவிட்டுத் தப்பியோடியபின் அதிபராக பொறுப்பேற்ற ரணில் விக்கிரமசிங்கேவின் கூட்டணி, 5 இடங்களையும், ராஜபக்சவின் கட்சி 3 இடங்களையும் வென்றுள்ளது.
தமிழர் வாக்குகள் யாருக்கு:
அனைவரையும் ஆச்சரியப்பட வைத்த விசயம் என்னவென்றால், தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் தாயகப்பகுதியான வடக்கு கிழக்கில் மட்டக்களப்பு மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களையும் இலங்கை அதிபரின் கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சி கைப்பற்றியுள்ளது.
இதுமட்டுமல்லாமல் மலையகத்திலும் அக்கட்சி ஆதிக்கத்தைச் செலுத்தியுள்ளது. இக்கட்சியில் இருந்து 12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வாகியுள்ளனர். அதில், இருவர் மலையகப் பெண்கள்.மலையகத்தைச் சேர்ந்த பெண்கள் நாடாளுமன்றம் செல்வது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்ச்சித் தோல்வி:
30 வருடங்கள் தொடர்ந்து யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த டக்ளஸ் தேவானந்தா இந்தமுறையை தோல்வியைத் தழுவியுள்ளார். மேலும், தமிழ் அரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்பி சுமந்திரனும் தோல்வியை சந்தித்துள்ளார்.
AKD-க்கு வாழ்த்து:
மறுமலர்ச்சி யுகத்தை ஆரம்பிக்கத் தோள் கொடுத்த அனைவருக்கும் நன்றி என அனுர குமார திசநாயகே தெரிவித்துள்ளார். இந்நிலையில், இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா பெரும்பான்மை பெற்ற தேசிய மக்கள் சக்தி கட்சிக்கும், AKD-க்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் நாடாளுமன்றம் 21ம் தேதி கூடவுள்ளது குறிப்பிடத்தக்கது.