
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்தவர் பாலாஜி மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும் பணிப்பாதுகாப்பு கோரியும் மருத்துவர்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்திவருகின்றனர்.
சென்னை கிண்டி அரசு மருத்துமனையில் புற்றுநோய் துறையில் இன்று(நவம்பர் 13) காலை பணியாற்றிய மருத்துவர் பாலாஜியை விக்னேஷ் என்ற இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. காயமடைந்த மருத்துவர் பாலாஜி அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படடுள்ளார்.
மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷை போலீசார் உடனடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், இளைஞர் விக்னேஷின் தாய் புற்றுநோய்க்காக கடந்த 6 மாதமாக சிகிச்சை பெற்றுவருதும், சிகிச்சை தொடர்பாக அவர் ஏற்கெனவே மருத்துவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.
சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அவருடைய வாகனத்தை மறித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவரை காவல்துறை பாதுகாப்பாக அழைத்துச் சென்றது.
போராட்டம் குறித்து ஜனநாயக மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த பாலாஜி, பேசுகையில்,” அரசு மருத்துவமனையில் ஆயுதம் தாங்கிய காவல்துறை பாதுகாப்பு வேண்டும். மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை மேற்கொள்ள வேண்டும். நோயாளிகளுடன் ஒருவர் மட்டுமே உள்ளே வரவேண்டும் என்ற விதியை கடுமையாக அமல்படுத்தவேண்டும்” என வலியுறுத்தினர்.
மேலும், “அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் குறைவாக உள்ளனர். தற்போது, 23,000
மருத்துவர்கள் மட்டுமே உள்ளனர். தமிழ்நாட்டு மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால் 80,000 மருத்துவர்கள் இருக்கவேண்டும். எனவே, அரசு இதனைக் கவனத்தில் கொண்டு விரைவில், குறைந்தபட்சமாக 20,000 மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.