
தெலுங்கு மக்கள் வந்தவர்கள் அல்ல தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பகுதியானவர்கள் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரியிருந்த வழக்கில் கருத்து
தெலுங்கு மக்கள் வந்தவர்கள் அல்ல தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பகுதியானவர்கள் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நடிகை கஸ்தூரி ஜாமீன் கோரியிருந்த வழக்கில் கருத்து தெரிவித்துள்ளது.
தெலுங்கு மக்களை அவதூறாகப் பேசியதாக,மதுரை நாயுடு மகாஜன சபை கஸ்தூரி மீது அளித்திருந்த புகார் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்தது. அப்போது, கஸ்தூரி தரப்பு அவர் சமூக ஊடகத்தில் மன்னிப்பு கேட்டுவிட்டதாகவும், அதற்கிடையில் இந்தப்புகார் அளிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எதிர் தரப்பு சார்பில் ஆஜாரான வழக்கறிஞர், கஸ்தூரி திட்டமிட்டு ஒரு குறிப்பிட்ட மக்களின் மாண்பை குலைக்கும் வகையிலும், சமூக மோதலை தூண்டிவிடும் வகையிலும் பேசியுள்ளார் என வாதிடப்பட்டது. மேலும், கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது எனவும், இது மற்றவர்களுக்கு பாடமாக அமையும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட உயர் நீதிமன்றம், தெலுங்கு மக்கள் வந்தவர்கள் அல்ல தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தமிழகத்தின் பகுதியானவர்கள் எனக் கருத்து தெரிவித்ததோடு, இதுதொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்ற விவரத்தையும், சமூக ஊடகத்தில் இருந்து சம்மந்தப்பட்ட வீடியோவை நீக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேட்டறிந்தார். இதற்கிடையில் கஸ்தூரி தரப்பு அவகாசம் கேட்ட நிலையில், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிராமணர்கள் சமூகத்தின் மீது தொடர்ந்து அவதூறு பேசுவதை கண்டித்து கடந்த நவம்பர் 3ம் தேதி நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது நடிகை கஸ்தூரி பேசிய பேச்சு சர்ச்சையானது. அவர் பேசிய பேச்சு சமூக ஊடகத்தில் வெளியாகி விவாதப் பொருளான நிலையில், அவர் மன்னிப்பு கேட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.